சி.எல்.சி கிறீன்

சி.எல்.சி கிறீன் என்பது நாடளாவியரீதியில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடான ஒரு பேண்தகமை செயற்திட்டமாகும். இந்த நிகழ்ச்சித்திட்டம் எல்.ஓ.எல்.சி குழுமத்தால் அதன் பேண்தகமை சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விரிவான பேண்தகமை ஊக்குவிப்புப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகும்.

இலங்கையின் பல்லுயிர் மற்றும் இயற்கை சூழல் கட்டமைப்பினைப் பேணிப் பாதுகாத்து ஒரு பசுமையான இலங்கையை தோற்றுவிப்பதே இந்த செயற்திட்டத்தின் இறுதி குறிக்கோள். அதே நேரத்தில் ஆரோக்கியமான இயற்கை சூழல்களின் அடிப்படையில் இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளது. இந்த விரிவான நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் கட்டமாக இலங்கையில் உள்ள அனைத்து 25 மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட 60 முதல் 100 வரையான பாடசாலைகளில் 1000 மரத் தோட்டங்கள் வளர்க்கப்படும்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் மரம் நடும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான தேவை குறித்தும், காடழிப்பு மற்றும் இலங்கைக்கு அதனால் ஏற்படுகின்ற தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இச்செயற்திட்டத்தினூடாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் இலங்கையின் வருங்கால சந்ததியினருக்கு நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி கற்பிக்கவும், மரங்களை பேணிப் பராமரிப்பதில் சில பொறுப்புகளை கையாள சிறுவர்களை வலுவூட்டவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பசுமை முயற்சிகளை சீராக முன்னெடுத்துச் செல்வதற்காக நாடு முழுவதும் உள்ள தனது 66 கிளைகளையும் சி.எல்.சி இதில் ஈடுபடச் செய்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் மாவட்ட மற்றும் பிரிவு மட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு கிளை மட்டத்திலும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சி.எல்.சி கிறீன் பாடசாலைகள் மரநடுகை செயற்திட்டத்தின் முதல் கட்டம் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் ஒக்டோபர் 16, 2018 அன்று தொடங்கப்பட்டுள்ளது.

கொய்யா மற்றும் மா போன்ற பழ வகை தாவரங்களை உள்ளடக்கிய பல்வேறு வகையான நூறு மரங்கள் பாடசாலை அதிபர், பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பு மற்றும் விரிவான ஆதரவுடன் நாட்டப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாணவர்களிடையே அனைத்து தாவரங்களையும் வளர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து வெளியேறும் வரை தாவரங்களைக் கவனித்துக்கொள்வது அவர்களின் பொறுப்பாகும்.

செயற்திட்டத்தின் முதல் கட்டத்தின் நிறைவில் சிறந்த வகையில் செயல்பட்டவர்களுக்கு அவர்களின் சிறந்த முயற்சிகள் மற்றும் பங்களிப்புக்காக சி.எல்.சி கிறீன் விருது வழங்கப்படும். சி.எல்.சி கிறீன் பாடசாலைகளில் சிறந்த பாடசாலையையும், சி.எல்.சி கிளை வலையமைப்பில் சிறந்த கிளையையும் தெரிவு செய்யவும் எண்ணியுள்ளது.